தமிழ் நாடகக் கலையால் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை உலகறியச் செய்தவரும் சபரிமலை சன்னிதானத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை வழங்கியவரில் ஒருவருமான நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் பெருமைகள் மற்றும் சாதனைகளின் தொகுப்பு.
நாடகத்தின் மேடைகளை நல்லதொரு கோயிலாக்கி ஏடகத்தில் அடங்காத நவரசத்தால் எண்ணிலா புராண நாடகங்கள் நடத்திக் காட்டி நூதனமாம் புது மேடை இலக்கணத்தில் நுண்ணறிவால் பல நுட்பங்கள் சேர்த்த கலைக்கோமான் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை தன் நாடக வாயிலாக-உலகறிய செய்த திரிகால ஞானி காலத்தால் வெல்ல முடியாத சாதனை நாயகனாம் நாடகச் சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கத்தின் குன்றாத புகழ் என்றென்றும் வாழ்க! வாழ்க!
வாழ்ந்த காலம் 29.10.1906 -19.10.1974.
பெற்றோர்
சுப்பிரமணியப் பிள்ளை – குப்பாயம்மாள்.
பிறந்த ஊர்
தஞ்சாவூர்.
தோற்றுவித்த நாடக சபை –
மதுரை தேவி பால வினோத சங்கீத சபா (ஸ்தாபிதம்-1933).
சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் இந்த அரிய ஓவியத்தை 1941 ஆம் ஆண்டு நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் தனது “மதுரை தேவி பால வினோத சங்கீத சபா”வின் பிரதான ஓவியர் ஓவிய ஜாம்பவான் திரு V. மாதவன் பிள்ளை அவர்களுடன் ஒரு மண்டல விரதமேற்று சபரிமலை சன்னிதானம் சென்று தங்கியிருந்து இந்த ஓவியத்தை எழுதினார்கள். இவ் ஓவியத்தில் உள்ள ‘ஸ்ரீ ஐயப்பனின்’ ஐம்பொன்விக்ரஹம் தான் 1950 ஆம் ஆண்டு சபரிமலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பின்னமானது. பின்னர் இவ் ஓவியத்தை கொண்டுதான் நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களும் ஆன்மீக வள்ளல் சர் P.T. ராஜன் அவர்களும் கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலையில் புதியதாக ஸ்ரீ ஐயப்பனின் ஐம்பொன் விக்ரஹத்தை வார்த்து, வடிவமைத்து 1951 ஆம் ஆண்டு சபரிமலையில் பிரதிஷ்டை செய்தார்கள். அவ்விக்ரஹத்தைதான் தற்போது சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சன்னிதியில் நாம் வழிபட்டு வருகிறோம். ஸ்ரீ ஐயப்பனின் இந்த அரிய ஓவியம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், தெற்கு தேவி தெரு, தேவி தோட்டம், பழைய கதவு எண்.7 புதிய கதவு எண். புதிய கதவு எண். 17 என்ற முகவரியில் உள்ள நாடக சக்கரவர்த்தி நவாப். T.S ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களால் பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும், ஐயப்ப பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ள ஏதுவாக கட்டப்பட்ட “தேவி சன்னதி” யின் வழிபாட்டில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கடுக்கரை எனும் சிற்றூரில் தமிழ் நாடக ஆசிரியர் தெய்வீக கவி ரத்தினம் K.V. உடையார் பிள்ளை அவர்கள்தான் நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளைக்கு ‘ஸ்ரீ ஐயப்பன்’ நாடகத்திற்கு உரை மற்றும் பாடல்கள் எழுதி கொடுத்தார். சபரிமலை ஸ்ரீ ஐயப்பன்பால் எல்லையில்லா பக்தி கொண்ட இருவரும் கடுக்கரையில் ஐந்து மலைகளுக்கு இடையில் சபரிமலை சன்னிதானம் போன்றே ஸ்ரீ ஐயப்பனுக்கு சன்னதி அமைத்து பொதுமக்கள் வழிபட ஆலயம் அமைத்தனர். அச்சன்னிதானத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பனின் திரு விக்ரஹமானது கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மேயர் P. சுப்பிரமணியன் அவர்களது மெர்ரிலாண்ட் ஸ்டுடியோவில் வார்க்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனின் திரு விக்ரஹத்தை வார்த்த அதே வார்ப்பில் தான் இந்த விக்கிரஹமும் வார்க்கப்பட்டது. ஆகையால் தான் இரு விக்கிரஹங்களும் ஒரு சேர அமைந்திருக்கும். இன்றும் தெய்வீக கவி ரத்தினம் K.V. உடையார் பிள்ளை அவர்களின் வாரிசுகளான நாஞ்சில் கவி திரு K.O. மகாதேவன் பிள்ளை, நாஞ்சில் திரு K.M.ஐயப்பன், நாஞ்சில் திரு.K.M. ராம்ஷங்கர் ஆகியோர் இவ்வாலயத்தை மிகச் சிறப்பான முறையில் நிர்வகித்து வருகின்றனர்.
தீண்டாமை ஒழிப்பில் மகாத்மா காந்தியின் வழியை தீவிரமாக பின்பற்றிய நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் “நந்தனார்” நாடகத்தை 1934 பிப்ரவரி 6 கோயமுத்தூரில் தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் நெடுநேரம் அமர்ந்து பார்த்து, பாராட்டி, பாராட்டு மடல் ஒன்றை வழங்கி சென்றார். அதில் இந்நாடகச் சபையின் நற்செயல்கள் நாட்டிற்கு நன்மை பயப்பனவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு தமிழிலேயே “காந்தி” என்று கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நாடகக் கலைக்கு நவாப் T.S ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களால் மகுடம் சூட்டப்பட்டது என்றால் அது மிகையாகாது. மேலும் அன்றைய நாடக வசூல் தொகையை மகாத்மா காந்தி தொடங்கிய ‘ஹரிஜன சேவா சங்கத்திற்கு’ நன்கொடையாக நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களால் அண்ணல் மகாத்மா காந்தியிடம் வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி அவர்கள் நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளைக்கு கையால் நூல்நூற்கும் “சர்க்கா” எனும் கயிறாட்டையை பரிசளித்தார். அதுமுதல் தாமும் தனது நாடக சபை மாணவர்களும் தினமும் நாடகப் பயிற்சியின் இடையே கயிறாட்டையால் நூல் நூற்று அந்நூலை திருப்பூர் நெசவாளைக்கு அனுப்பி துணிகளாகப் பெற்று அந்தக் கதர் ஆடைகளை மட்டுமே தாமணிந்து தமது மாணாக்களையும் அணியச் செய்து “சுதேசி இயக்கத்தில்” தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். இலக்கிய பரிச்சியத்திற்கும் சலைத்தவரல்ல நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை, இந்திய தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றிய பங்கிம் சந்தர் சட்டர்ஜியின் “துர்க்கேஷ் நந்தினி” நாவலை தமிழில் மொழி பெயர்த்து “பிரேம குமாரி” என்ற பெயரில் நாடகத்தை நடத்தினார்.கோவை திரு.C.A. அய்யாமுத்து அவர்களால் இயற்றப்பட்ட “இன்பசாகரன்” என்னும் தேசிய நாடகத்தை நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார். இவரது குழுவினர்களைக் கொண்டு, மோஷன் பிக்ஷ்ர்ஸ் கம்பைன்ஸ்(மெர்ரி லேண்ட் ஸ்டுடியோ) நிறுவனர் திருவனந்தபுரம் முன்னாள் மேயர் திருவாளர் P. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தமிழில் “இன்பசாகரன்” என்றும் ஹிந்தியில் “பிரேம் சாகர்” என்ற பெயரிலும் 1939 ல் திரைப் படமாக்கப்பட்டது. திரைப்படம் முழுவதும் படமாக்கப்பட்டு முடிந்து வெளியிட தயாராக இருந்த நிலையில் துரதிஷ்டவசமாக இப்படத்தின் தமிழ் திரைபடச்சுருள் முழுவதும் ஸ்டூடியோவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் முற்றிலும் எரிந்து போனது. பாடல் ஒலிநாடா மட்டுமே கிடைக்கப்பெற்றது.
மேலும் ரவீந்திரநாத் தாகூரின் “ராஜா ஓ ராணி” நாவலை “ஜோதி மன்னன்” எனும் பெயரில் தமிழில் நாடகமாக மேடையேற்றினார். இந்நாடகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் கதாநாயகன் உருவம் இல்லாமல் அருவமாக உள்ளவனாதலால் இக்கதையை நாடகமாக்குவதென்பது மிகவும் சவாலான ஒன்றானது, தன் மதிநுட்பத்தால் இக்கதையை நாடகமாக்கி அதில் வெற்றியும் கண்டார். இவ்வெற்றிக்கு பரிசாக 1964 ஆம் ஆண்டு, சிறந்த நாடக இயக்குனருக்கான தேசிய விருதான “சங்கீத் நாடக அகாடமி புரஸ்கார்” விருது இந்திய ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.
1938 ஆம் ஆண்டு நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் “இயேசுநாதர்” நாடகத்தை வேடிக்கன் போப்பின் செயலாளர் கண்டு களித்து பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவித்தார். ‘இயேசு நாதர்’ மற்றும் ‘ஞான சௌந்தரி’ நாடகத்தின் மூலம் தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் தழைத்தோங்க இவரது நாடக சபையின் இவ்விரு நாடகங்களும் ஒரு காரணியாக இருந்தது. ஞான சௌந்தரி நாடகம் நடந்த அந்நாளில் பக்தியின் வெளிப்பாடாக தம் பெண் பிள்ளைகளுக்கு ஞான சௌந்தரி என பெயரிட்டு மகிழ்ந்தவர் பலர். இந்நாடகத்தின் கதையே பின்னாளில் ஞான சௌந்தரி திரைப்படமாக வெளியானது. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி கிறிஸ்தவ பேராயர்கள் நவாபின் இவ்விரு நாடகங்களைப் பார்த்துவிட்டு பாராட்டி பாராட்டு மடல்களை அளித்துள்ளனர்.
ஸ்ரீ ஐயப்பன் நாடகம் வாயிலாக “இஸ்லாமியரான வாபரர்” பற்றிய தகவல்களை மிக நுட்பமான முறையில் காட்சிப்படுத்தி சபரிமலை ஸ்ரீ ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் முன், பக்தர்கள் இஸ்லாமிய வாபரரை தரிசிக்க வேண்டும் எனும் வழிமுறையை காட்சியமைத்து மக்கள் மனதில் பதிய வைத்து தமிழ் நாடகக் கலையால் ஹிந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றிவித்தவர் நாடக சக்கரவர்த்தி நவாப் T.S ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள்
நாடகச் சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் சாதனை நாடகங்களின் புள்ளிவிவர பட்டியல்
(தமிழ்நாடு, கேரளா, மைசூர், பம்பாய், டெல்லியில் நடந்த நாடகக் காட்சிகளின் அடிப்படையில்)
- ஸ்ரீ கிருஷ்ண லீலா – 1418 காட்சிகள்.
- ஸ்ரீ ஐயப்பன் – 1341 காட்சிகள்.
- தசாவதாரம் – 1300 காட்சிகள்.
- இயேசுநாதர் -1102 காட்சிகள்.
- சம்பூர்ண ராமாயணம் – 830 காட்சிகள்.
- குமார விஜயம் – 732 காட்சிகள்
- இன்ப சாகரன் – 732 காட்சிகள்
- பக்த ராமதாஸ் – 613 காட்சிகள்
- நந்தனார்-350 காட்சிகள்
- சக்தி லீலா-338 காட்சிகள்
மற்றும்
- பக்த துருவன்
- பக்த பிரகலாதா
- ஞான சௌந்தரி
- ராஜ பக்தி
- பிரேம குமாரி
- ராஜாம்பாள் .
- சதி அனுசுயா .
- பிரபலச் சந்திரா .
- மனோகரா.
- பவளக்கொடி.
- ஜோதி மன்னன்.
நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் பெற்ற பட்டங்கள் மற்றும் விருதுகள் பற்றிய விபரம்.
நவாப் பட்டம்.
1933 ஆம் ஆண்டு ‘பக்த ராமதாஸ்’ நாடகத்தில் நவாப் T S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் “நவாப் தானிஷா” வாக வேடமிட்டு தமிழுடன் சேர்த்து உருது மொழியும் பேசி நடிப்பார். அந்நாடகத்தின் நவாப் தர்பார் காட்சி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. நவாப் வந்து செல்லும் ஒவ்வொரு காட்சியும் மக்கள் மனதில் நீங்காயிடம் பெற்றது. அது முதல் மக்கள் T.S. ராஜமாணிக்கம் பிள்ளையை “நவாப்” ராஜமாணிக்கம் என அழைக்க தொடங்கினர். இதை உறுதி செய்யும் வகையில் 1940 ஆம் ஆண்டு மைசூரில் நடந்த ‘பக்த ராமதாஸ்’ நாடகத்தை கண்டு களித்த மைசூர் மகாராஜா ‘ஜெய சாம்ராஜ் உடையார்’ அவர்கள் நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளைக்கு வெள்ளியிலான மயிலாசனத்தில் அருகில் நின்று கொண்டிருக்கும் நவாபின் சிலையையும், வெள்ளி உடையவாளையும், நவாப் அணிந்து கொள்ளும் அரச உடைகளையும் பரிசாக தந்து “நவாப்” எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார்.
நாடகக் கலையரசு
1934 ஆம் ஆண்டு கோவையில் நடந்த நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளையின் தீண்டாமை ஒழிப்பு நாடகமான “நந்தனார்” நாடகத்தை பார்த்துவிட்டு கோவை மக்கள் ‘நாடகக் கலையரசு’ எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.
நாடக கலாநிதி
1946 ல் ‘பாரதி மணிமண்டபம்’ கட்டுமான நிதிக்காக கல்லிடைக்குறிச்சியில் நாடகம் நடத்தி அதன் வசூல் முழுவதையும் வழங்கிய விழாவில் அமரர் “கல்கி. கிருஷ்ணமூர்த்தி” அவர்களால் வழங்கப்பட்டது.
சுதந்திர நாடக மணி
இந்தியா சுதந்திரம் அடைந்த நன்நாளான ஆகஸ்ட் 15, 1947 அன்று தூத்துக்குடி மக்களால் வழங்கப்பட்டது.
நாடக சக்கரவர்த்தி
1948 ஆண்டு திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் சமஸ்தான திவான் சர். சி. பி. ராமசாமி ஐயர் அவர்களால் தங்கம் மற்றும் வெள்ளியிலான தசாவதார சிற்பங்கள் கொண்ட சுழற் கோப்பை மற்றும் ‘நாடக சக்கரவர்த்தி’ எனும் பட்டமும் வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இவ்விழாச் செய்தியானது பம்பாயில் உள்ள ‘பம்பாய் க்ரானிக்கல்’ செய்தித்தாளில் வெளியானது.
நாடகக் கேசரி
மூதறிஞர் திரு. ராஜாஜி அவர்களால் 1952 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்டது.
நாடக கலைக் காவலன்
1955 ல் பம்பாயில் (மும்பை) பம்பாய் தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற நாடக விழாவில் பம்பாய் கவர்னர் ஹரேகிருஷ்ண மேதாப் அவர்களால் வழங்கப்பட்டது.
சங்கீத் நாடக அகாடமி புரஸ்கார் தேசிய விருது
1964 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.
நாடகச் சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் “மதுரை தேவி பால வினோத சங்கீத சபா”வில் பயிற்சி பெற்று ஜொலித்த பிரபலங்கள்.
- திரைப்பட நடிகர் திரு. M.N. நம்பியார் (மாஞ்சேரி நாராயணன் நம்பியார்)
- தமிழ் திரைப்பட நடிகர்.திரு. N.N. கண்ணப்பா(டவுன் பஸ் பட கதாநாயகன்
- தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்.திரு S.M. சுப்பையா நாயுடு.
- இயக்குனர், நாடக ஆசிரியர், நடிகர். திரு S.D. சுந்தரம்.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு. கள்ளபார்ட் நடராஜன்.
- தமிழ் திரைப்பட இயக்குனர் திரு K.S.கோபாலகிருஷ்ணன்.
- மலையாள நடிகர் திரு T.K. பாலச்சந்தர்.
- தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் திரு S.A. நடராஜன்.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு. திருச்சி சௌந்தரராஜன் (தமிழக முன்னாள் அமைச்சர்)
- தமிழ் திரைப்பட நடிகர் கலைமாமணி திரு T.K கல்யாணம்.
- தமிழ் திரைப்பட நடிகர் கலைமாமணி திரு T.K கோவிந்தன்.
- காரைக்கால் திரு.V.கோவிந்தராஜன்(புதுச்சேரி அரசு முன்னாள் வேளாண்துறை அமைச்சர்)
- நாடக ஆசிரியர் திரு. சக்தி கிருஷ்ணசாமி.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு. குலதெய்வம் ராஜகோபால்.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு. காக்கா ராதாகிருஷ்ணன்.
- திரை இசை தென்றல் திரு. திருச்சி லோகநாதன்.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு. K.V. சீனிவாசன்.
- கலைமாமணி திரு. T.K.மாரியப்பா.
- நாடக மேடை அமைப்பாளர் திரு. S.K. மாணிக்கம்.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு.P.S. சிவானந்தம்.
- தமிழ் திரைப்பட நடிகர் திரு NKT.முத்து
- தமிழ் திரைப்பட நடிகர் திரு P.K. செல்லமுத்து
- தமிழ் திரைப்பட நடிகர் திரு T.P சாமிக்கண்ணு
- தமிழ் திரைப்பட நடிகர் திரு T.P சக்திவேல்
- திரைப்பட நடிகர் மற்றும் எழுத்தாளர் திரு. பாரதிமணி.
- எழுத்தாளர் திரு. கௌதம நீலாம்பரன்.
- திரு S.R. ஜெயராமன் (சேலம்-1 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).